ஹகீகத் (உண்மை நிலை) என்பது என்ன?
அதை அடைந்து கொள்வது எப்படி?
உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள சம்பந்தமும் சேர்க்கையும்:
மனிதனுக்கு உடல் என்பது ஒரு வெளிப்படையான அமைப்பாக இருப்பதுபோல், அவனுடைய உண்மை அமைப்பு அவனுடைய அந்தரங்கத்தில் உள்ள ‘ரூஹ்’ அல்லது ஆத்மாவாகும். இதுவே அசலாகும். ரூஹ்/ஆத்மா இன்றி மனிதன் நடக்கமுடியாது, பேசமுடியாது, எந்த அசைவும் புரியமுடியாது. எந்தத் திறமையான செயலும் புரிய முடியாது. ஏன் ! ரூஹ் நீங்கிவிட்ட ஒரிரு நாட்களில் இந்த உடல் சகிக்கமுடியாத நாற்றமெடுத்துவிடும். அதைப் புதைக்காவிடில் மனிதர்கள் அதனால் பாதிப்படைவதோடு வியாதியஸ்தர்களாகவும் தொற்றுநோய் பிடித்தவர்களாகவும் ஆகக்கூடும். உடலும் ரூஹ் எனும் ஆத்மாவும் இணைந்திருக்கும் போது தான் மனிதனை மனிதன் என்று அழைக்கிறோம். அவ்வாறில்லாவிடில் அதை பிணம் என்றே கூறுகிறோம்.
ஈமான் (தெய்வீக நம்பிக்கை) மற்றும் வணக்கத்தின் ரூஹ் எனும் உயிரும் உடலும்:
மேலே கூறியது போன்று ஈமானுக்கு (தெய்வீக நம்பிக்கை)ம் மற்றும் வணக்க வழிபாட்டுக்கும் ஒரு வெளிப்படையான அமைப்பும் ஒரு அந்தரங்கமான அமைப்பும் உண்டு. உதாரணமாக தொழுகைக்கு உள்ள வெளிப்படையான அமைப்பும் (தோற்றம்), செயல்களுமான தக்பீர் தஹ்ரீமா, ருகுவு, ஸூஜுத் முதலியவையாகும். இவை ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் நிகழ்த்துகிறோம். ஆனால் தொழுகையின் அந்தரங்கமும் உண்மையுமான நிலையாதெனில் நமது உள்ளத்தை அல்லாஹ் (ஸூப்) வின் சன்னிதானத்தில் சமர்பிப்பது ஆகும். எல்லாவிதமான சிந்தனைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் உள்ளத்தை விடுபடச் செய்து, இறைவனை புகழ்வதிலும் அவனைவணங்குவதிலும் நம்மை ஆழமாகவும் உளமாறவும் ஈடுபடுத்திக் கொள்ளும்போது நாம் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிறோம். இதுவே ‘மிஃராஜ்’ எனப்படும்.
ஏனெனில் உண்மையாக தொழுகையை ‘மிஃராஜுல் முஃமினீன்’ அதாவது முஃமினீனுடைய மிஃராஜ் எனக் கருதப்படுவதற்கு காரணம் யாதெனில், தொழுகையில் கல்பை இறைவனுடைய சந்நிதானத்தில் சமர்ப்பித்து அவனுடைய மாட்சியைப் பற்றி முழுமனதோடு புகழ்வதை கொண்டு தொழுபவர் இறைவனோடு சம்பாஷிக்கும் நற்பாக்கியத்தைப் பெற்றவராகி விடுவதே காரணம். உள்ளத்தை முழுமையாக இறைவனோடு ஒன்றி விடாவிட்டால் தொழுகை தொழுகையாக இராது. இதனால் தொழுதவர்க்கு கிடைக்கக்கூடிய நற்கூலியும் பலனும் கிடைக்காது. இப்படிப்பட்ட தொழுகை தொழுதவர் மீதே தூக்கியெறியப்படும்.
சுருக்கமாகக் கூறுமிடத்து தொழுமையின் உடல் என்பது தொழுகையில் வெளிப்படையாக நிறைவேற்றப்பட வேண்டிய முறையான செயல்களாகும், தொழுகையின் ரூஹ் அல்லது உயிர் (ஆத்மா) என்பது இறைவனின் முன் தன் இதயத்தை (உள்ளத்தை) முழுமையாகச் சமர்ப்பிப்பதாகும்.
ஈமான் : உள்ளத்தில் உறுதிப்படுத்துல்
லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் எனும் ஒப்புதலே இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த வசனத்தைச் சொல்லி , வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர் என்பதை நாம் உறுதிப் படுத்துகிறோம். இதனை நாவால் மொழிவதுடன் உள்ளத்தால் உறுதி செய்வது மிக மிக முக்கியம். இதுவே ஈமானின் சான்று என்று கருத்தை மத அறிஞர்களும், மறைமெய்மை ஞானிகளும் ஒருமனதாக வலிவுறுத்தி இருக்கிறார்கள். நாவினால் மொழிவதை உள்ளமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்போது தான் ‘கல்புடன் உறுதி கொள்ளல்’ என்ற நிகழ்வு ஏற்படும். இதயத்தை (கல்பை) பக்குவப்படுத்திய பிறகு பிடிமுரண்டுள்ள ‘நஃப்ஸெ அம்மாரா’ வை தூய்மையாக்கி இதயத்தினுள் ஈமானை நிலை நிறுத்தும் போது தான் மனிதன் முஃமின் ஆகிறான். வெறும் நாவால் இறைவனை ஏற்றுக் கொள்வதால் மட்டும் யாரும் முஃமின் ஆகிவிட முடியாது. இதைப்பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:
சூரா : ஹிஜ்ராத் (அல்குர்ஆன்) 49:14 நாட்டுப்புற வாசிகள், நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம் என்று சொல்கிறார்கள். நீர் கூறுவீராக: நீங்கள் விசுவாசிக்கவில்லை. எனினும் நீங்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களாக இருக்கிறீர்கள் (ஏனெனில்)விசுவாசம் உங்களுடைய இதயங்களில் நுழையவே இல்லை
நாவால் கூறப்படுவது இதயத்திலுள்ள நுழைவதற்கு நஃப்ஸெ அம்மாரா தடையாக இருக்கிறது. இது மனிதர்களை நீசமான இச்சைகளுக்கும், புலனுணர்ச்சி இன்பங்களுக்கும் அடிமையாக்கி விடுகிறது நஃப்ஸெ அம்மாரா தன்னையே இறைவனாக நினைத்து செயல்படும் போது, அது வேறொரு இறைவனுக்குப் பணிந்து வழிபட எவ்வாறு உடன்படும்?
நஃப்ஸெ அம்மாரா என்பது என்ன?
ஒரு நற்செயல் நிகழ்த்த வேண்டுமென்ற உணர்வு உள்ளத்தில் எழும் போது, இந்த நல்லுணர்வை ஒரு சக்தி அமுக்கி விட்டு, தனது விருப்பத்திற்கேற்ப உங்கள் செயலைத் திசை திருப்புவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். நற்காரிய உணர்வைத் தூண்டுவது ஆன்மா (ரூஹ்) ஆகும். அந்த எண்ணத்தை நசுக்கி விட்டு தாம் விரும்பும் பாதையில் உங்களை மடக்கி விடுவது நஃப்ஸெ அம்மரா வாகும் இந்த நஃப்ஸ் எப்போதும் தீயச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது. ஆதிக்க மனப்பான்மையுள்ள, சிறிதும் இணங்காத, வீராப்பான இந்த நஃப்ஸெ தூய்மைப்படுத்தாமல் விட்டு விட்டால், அது எழுபது சாத்தான்களை விட அதிக சக்தி பெற்று விடுகிறது எனறு பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள் ஹஜ்ரத் மஃக்தூமுல் முல்க் ஷைக் ஷர்ஃபுத்தீன் அஹ்மத் யஹ்யா முனீரி (ரஹ்) அவர்கள்,
மக்தூபாதெ ஸதி எனும் நூலில் எழுதி இருப்பதாவது:
“நஃப்ஸெ அம்மாரா எந்த அளவுக்கு பிடிமுரண்டுள்ளது,
மூர்க்கத்தனமானது என்றால், அது தீயச்செயலைப் புரிய
நாட்டங்கொண்டால், அதனை எல்லா இறைத்தூதர்கள்,
எல்லா வான நூல்களைக் காட்டி பயமுறுத்தினாலும் அது
பாபச் செயலை செய்து தான் தீரும். வீராப்பும் இணங்காமையும்
மறுத்துரைத்தலும் அதன் இயல்பாகும்”
நஃப்ஸெ அம்மாராவைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:
சூரா : யூசுப் (அல்குர்ஆன்) 12:53 மனம் பாவம் செய்யும் படி அதிகம் தூண்டக் கூடியதாக இருக்கிறது.
நஃப்ஸூக்குள் நாத்திகம், கபடம், அகந்தை, தற்பெருமை, பேராசை, பிறர்பொருளை, அபகரித்தல், வஞ்சகம், ஏமாற்றுதல், பொய், பொறாமை ,வெளிவேஷம், கஞ்சத்தனம் போன்ற தீய தன்மைகள் உள்ளன. இந்த தீய குணங்கள் வெளியேற்றப்படவில்லையென்றால் உள்ளம் தூய்மையடையாது. உள்ளம் பரிசுத்தம் அடைந்தால் மட்டுமே அதில் இறையன்பு குடிபுக முடியும். அல்லாஹூக்கு அடிபணிதல், அல்லாஹ்வை வணங்கி வழிபடுதல் எனும் சங்கிலி அதனுடைய கழுத்தில் பிணைக்கப்படவில்லையானால் அதில் இறை நம்பிக்கை (நூரே ஈமான்) மலராது. பரிசுத்தமான உள்ளம் கொண்ட மனிதனே முஃமின் ஆக முடியும். உள்ளத் தூய்மை இல்லாவிட்டால் இறை நம்பிக்கை (ஈமான்)யும், இதர வணக்க வழிபாடுகளும், வெறும் வார்த்தைகளாகவும் சடங்காச்சாரமாகவும் தான் இருக்கும். இறைவனின் திருமுன்னிலையில் கைகட்டி நின்று அவனுடைய போற்றுரை உரைகளும், திருக்குர்ஆனை நாவால் ஒதிக் கொண்டிருந்தாலும், இந்த நஃப்ஸெ அம்மாரா தனது ஆதிக்கத்தால் உங்களை கடைவீதியின் பக்கம் இழுத்துச் செல்கிறது. உங்கள் மனைவியின் நினைப்பூட்டி திசை திருப்பி விடுகிறது. உங்கள் வணிகசாலை அல்லது காரியாலயத்தின் பக்கம் கவனத்தைக் கொண்டு செல்கிறது. கொடுக்கல் வாங்கல், வரவு செலவு, ஆகியவற்றின் எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. இதனால் நமது வணக்க வழிபாடுகள் பயனற்றுப் போகின்றன. நஃப்ஸெ அம்மரா எப்போதும் ஆண்டவனுக்குத் தலை வணங்குவதில்லை. இறைவனுக்கு அடிபணிந்து வணங்க விடாமல் தடுத்து விடும் பெரிய விரோதி இந்த நஃப்ஸெ அம்மாரா தான்!
மெய்ப்பொருள் (ஹகீகத்) யை அறிந்து கொள்வதற்கான சிறந்த வழி ஸில்ஸிலயெ ஷாஹியா அஸ்ராரியாவின் போதனைகள்.
நமது பெரியார்களின் போதனைகளில் நஃப்ஸெக் கட்டுப் படுத்துவது, உள்ளத்தின் இருளைப் போக்குவது, ஈமான் மற்றும் நல்லொழுக்கங்களை அலங்கரிப்பது, இதயத்தை உறுதிப்படுத்துவது, வணக்க வழிபாடுகளில் ஆர்வம் கொள்வது, இறைவன் பால் நன்றியுணர்வு கொண்டு அவனுடைய இணக்கத்தையும் நெருக்கத்தையும் பெறுவது, இறைவனின் பூடகமான ஞானத்தை அறிவது ஆகியவற்றிற்கு சிறந்த வழிவகைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டும், அனுபவரீதியில் நிருபிக்கப்பட்டும், நற்பலன்களும் வெற்றியும் பெறுவதற்கான ஒரே வழி இறைநேசர்களின் சமூகத்தில் அண்மி இருப்பதுதான். நஃப்ஸின் ஆராதனையை விட்டு, தானென்ற அகங்காரத்தை அறவே ஒதுக்கி, அல்லாஹ்வை மட்டுமே வழிபடுவோம் எனும் உறுதியுடன் அவனுடைய நல்வழியைக் கடைப்பிடித்து, தியானம் (ஜிக்ர்) மற்றும் இறைவனின் சிந்தனை (ஃபிக்ர்) களில் கடுமுயற்சியுடன் ஈடுபடுவோம் என்று இறைநேசர்களின் கரங்களில் உறுதிமொழி (பைஅத்) எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது தலைசிறந்த பெரியார்களின் மரபுரிமைச் சொத்தாகவும், அமானிதமாகவும், இந்த நல்வழி எங்களை வந்தடைந்துள்ளது. நற்பாக்கியங்களும் நற்பலன்களும் அளவில்லாமல் வழங்கும் இந்த வழிமுறையால் இதர மக்களும் பலனடைய வேண்டும். மனித வர்க்கத்திற்குச் சேவை புரிந்து நிலையான அருளில் நமது பங்கினைப் பெற்று விடவேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியாகும்.
எமது அழைப்பும் செய்தியும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது ஆகும்.
© Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.