கண்ணியம் மிகு
“ஷாஹியா அஸ்ராரியா”
ஸில்ஸிலா எனும் ஞானமார்க்கத்தின்
ஓர் அறிமுகம்
அல்ஹம்துலில்லாஹி வகஃப(எஹ) வஸலாமுன் அலா இபாதிஹில்லாதீனஸ்ஃபா
அல்லாஹ் ஜல்ல ஷானஹூவதஅஃலா இவ்வகிலத்தில் சகல படைப்புகளையும் விட மேலான படைப்பாகவும், சகல ஜீவராசிகளையும் விட புத்திகூர்மையும் மற்றும் பல சிறப்புகளையும் கொண்ட மனித வர்க்கத்தைப் படைத்து, இந்த மனிதனைப் பூமியில் தன்னுடைய ‘கலீஃபா’ எனும் பிரதிநிதியாக ஆக்க நாடியபோது, மலக்குகள் எனும் வானவர்களை நோக்கி அல்லாஹ் (ஜல்) கூறினான்:
சூரா : அல்பகரா (அல்குர்ஆன்) 2:30 “வஇஸ்கால ரப்புக லில் மலாயிகதி இன்னி ஜாயிலுன் ஃபில் அர்ளி கலீஃபா” (இன்னும், உம் இறைவன் வானவர்களை ‘நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்’).
இத்தீர்மானத்தின்படி அல்லாஹ் (ஜல்) மனிதனில் தன்னுடைய கல்யாண குணங்களில் சிலவற்றை அமைத்து அருளினான். அல்லாஹ்(ஜல்) தயாளனாகவும் கிருபையாளனாகவும் இருப்பது போல், மனிதனிலும் பிறரை மன்னித்தல், பிறர் பேரில் அன்பு பரிவு, கருணை கொள்ளல் ஆகிய தன்னுடைய நற்பண்புகளை அமையச் செய்தருளினான். அல்லாஹ்(ஜல்) எல்லா ஜீவராசிகளுக்கும் உணவையும் அளிப்பதோடு சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றல் படைத்தவன். இதேபோல் மனிதனிலும், தனக்காகவும், தன்னைச் சார்ந்துள்ள தன் அன்பு மனைவி குழந்தைகள் மற்றும் தன் குடும்பத்தார் யாவருக்காகவும், தேவையான உணவு, உடை மற்றும் சகல தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஆற்றலையும் திறமையும் கொடுத்தான். உதாரணமாக ஒரு தகப்பன் தன்னுடைய உழைப்பைகொண்டு சம்பாதித்து, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தேவையான சகலத்தையும் வாங்கி வழங்குவது போல், அல்லாஹ்(ஜல்) நீதியாளனாக இருப்பது போல் மனிதனிலும் நீதிமானாக வாழும் பண்பை அமைத்தான். அல்லாஹ்(ஜல்) மிக்க வல்லமை படைத்தவனாக (கஹ்ஹார், ஜப்பார்) இருப்பது போல், மனிதனுக்கும் கோபம் மற்றும் சீற்றம் எனும் குணத்தைக் கொடுத்தான்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அருளினார்கள். “நிச்சயமாக அல்லாஹ்(ஜல்) ஆதமைத் தன்னை போலவே படைத்தான். அதாவது தனது குணங்கள் மற்றும் தன்மைகளில் ஒரு பகுதியை அளித்தான்.
அல்லாஹ்(ஜல்) மனிதனைத் தன்னுடைய கலீஃபா எனும் பிரதிநிதியாகப் படைக்கப்போவதாக அறிவித்ததைக் கேட்ட மலக்குகள் அல்லாஹ்(ஜல்)விடம்
“(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா, அமைக்கப்போகிறாய்? ” என்று வினவினர். இதிலிருந்து தெளிவாவது யாதெனில், அல்லாஹ்(ஜல்) தன்னுடைய கல்யாண குணங்கள் தன்மைகளின் அடிப்படையில் மனிதனை சகல ஜீவராசிகளுக்கும் மேலானவனாகப் படைத்திருந்தாலும் மனிதனில் தீங்கு செய்யும் குணத்தையும் அமைத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனில் ‘நப்ஸ்’ அதாவது ‘நான்’ எனும் அகங்காரத்தையும், ‘ஷைத்தானின்’ குணங்களையும் கூடவே அமைத்தான். ஷைத்தான், தன்னுடைய தீய வழிமுறைகளைக்கொண்டு மனிதனில் உள்ள நற்பண்புகளை எல்லாம் அழித்து மனிதனைத் தீயவனாக்கி பாவம் புரிய வைத்து நியாயத்தீர்ப்பு நாளுக்குப் பின் நரகத்தில் தள்ள வைப்பேன் என்று சபதம் மேற்கொண்டான். இந்த ‘நப்ஸ்’ ‘ஷைத்தான்’ எனும் இரு தீய சக்திகளும் மனிதனில் தீய பழக்கவழக்கங்களை அதிகப்படுத்தி அனைத்து கொடுமைகளையும், அநீதிகளையும் புரிய வைத்தன. அல்லாஹ் (ஜல்) நமக்கு அளவில்லாத தயவும் நல்லாசிகளையும் வழங்கியுள்ளான். மேலும் நாம் நம்மை தீய சக்திகளிலிருந்தும் நஃப்ஸ் மற்றும் ஷைத்தான் இவைகளின் வலையில் சிக்காமல் தற்காத்துக் கொள்ளவும், பாவம் எனும் அழுக்கை நீக்கி பரிசுத்தமானவர்களாக ஆகவும் உதவிபுரிவதற்கு மனிதவர்க்கத்திலிருந்தே புனிதர்களான மகோன்னதமானவர்களை பூவுலகிற்கு அனுப்பி உதவினான். இந்த மகோன்னதமானவர்கள் நபிமார்களும் இறைநேசர்களும் இறைத்தூதர்களுமாவார்கள்.
இவ்வுலகம் தோன்றிய காலம் மற்றும் மனிதவர்க்கம் படைக்கப்பட்டது முதற்கொண்டு, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகை வரை அந்தந்த காலகட்டத்தில் எல்லா நாடுகளிலும், எல்லா சமுதாயத்திலும் தேவைக்கேற்றபடி அவ்வப்போது தீர்க்கதரிசிகளையும், நபிமார்களையும் அல்லாஹ்(ஜல்) இப்பூவுலகிற்கு அனுப்பிக்கொண்டேயிருந்தான். சுமார் 1,24,000 நபிமார்களையும் இறைத்தூதர்களையும் அல்லாஹ் (ஜல்) இப்பூவுலகிற்கு அனுப்பியுள்ளான். இந்த ஆத்மீகர்களும் புனிதர்களுமான நபிமார்களும், இறைத்தூதர்களும் மனிதவர்க்கத்தை கொடுமை, மற்றும் தீமைகளிலிருந்தும், தவறான பாதைகளில் செல்வதை விட்டும் தடுத்து, படைப்பாளனாகிய அல்லாஹ் (ஜல்) வுடைய நேர்ப்பாதையில் நடத்தாட்டினார்கள்.
எவ்வாறு நம் உடலுக்கு, நாம் உயிர்வாழ சீரான உணவும் நல்ல போஷாக்கும் அவசியமோ, அதே போல் நம்முடைய ஆத்மாவுக்கும் சாந்தியும் திருப்தியும் அளிக்க, மார்க்க அறிவு, வணக்க வழிபாடு, இறைத்தியானம் முதலியன அத்தியாவசியமானவையாகும். இவையே நம் ஆத்மாவுக்கான உணவும் போஷாக்குமாகும். நமது உடலானது எலும்புக்கூடு மற்றும் பல அங்க உறுப்புகளைக் கொண்டு ஆனதாகும். ஆயினும் உயிர்வாழ ஜீவகேந்திரமாக உள்ளது நமது ஆத்மாவே ஆகும். இதேபோல் மதங்களும் வணக்க வழிபாடு முதலியவைகளும் வெறும் ஆச்சார அனுஷ்டானங்களாகத் தோன்றினாலும், உண்மையில் இவை யாவும் நம்முடைய ஆத்மீகத்திற்கு பூரணத்துவம் கொடுக்க மிகவும் தேவையானவையாகும். மக்களில் சாமான்யர்கள், அதாவது சாதாரணமானவர்கள், மதச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், விழாக்கள் இவைகளை அனுஷ்டித்து வருவார்கள். ஆனால் நற்பாக்கியசாலிகளான பக்குவிகள்(சாதகர்கள்) மேலே கூறிய அனைத்து நற்காரியங்களோடு, நல்லொழுக்கம், கட்டுபாடு, மற்றும் கடினமான பிரயாசை இவைகளைக் கொண்டு தன்னுடைய “நஃப்ஸை” அடக்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அல்லாஹ் (ஜல்) உடன் நெருக்கமானவர்களாக ஆகிவிடுவதோடு, மற்றவர்களையும் தம்முடைய நற்போதனைகளால் ஞானமார்க்கத்தில் செல்ல உதவுகிறார்கள். இவர்கள் யாரும் நபிமார்களோ இறைத்தூதர்களோ அல்ல ஆனால் இவர்கள் நிச்சயமாக நபி அவர்களுடைய பிரதிநிதிகளாவர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு அல்லாஹ் (ஜல்) நபிமார்களை இப்பூவுலகிற்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டான். “ஷரி அத்” எனும் இஸ்லாமிய மார்க்க சட்டத்திட்டங்கள், நபிபெருமானார் (ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பப்பட்டு எல்லா மனிதவர்க்கத்துக்கும் கட்டாயமாக்கப்பட்டதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதையும் அன்னாரை நேசிப்பதையும், அல்லாஹ் (ஜல்) தன்னை நேசிப்பதற்கும் தன்னை நெருங்குவதற்கும் ஆன மேலான ஒரு வழிமுறையாகக் கருதுவதோடு திருமறையாம் குர்ஆனிலும் இவ்வாறு அருளியுள்ளான்:
“குல் இன் குன்தும் துஹிப்பூனல்லாஹ்
ஃபத்தபிவூனி யுஹ்பிப்குமுல்லாஹ்”சூரா : அல்இம்ரான் (அல்குர்ஆன்) 3:31 (நபியே) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்.அல்லாஹ்உங்களைநேசிப்பான். ”இதிலிருந்து தெளிவாவது யாதெனில், அல்லாஹ்வை நேசிப்பதற்கான ஒரே வழி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவதேயாகும்.
படைப்பாளனும் படைப்பும்:
ஒவ்வொரு “ரூஹு” அல்லது ஆத்மாவும் இறைவனுடைய படைப்பாகும். இதை அல்லாஹ்வே தன் திருமறையில் அருளியுள்ளான். “குலிர் ரூஹி மின் அம்ரி ரப்பி” சூரா : பனிஇஸ்ராயில் (அல்குர்ஆன்) 17:85 “(நபியே) ரூஹு” என்பது என் இறைவனுடைய கட்டளையில் உள்ளதாகும் எனக் கூறுவீராக. ஒவ்வொரு கட்டளையும், அதை இடுபவனைச் சேர்ந்ததும் சார்ந்ததுமாகும். ரூஹு என்பது எல்லா படைப்பினங்களிலும் உண்டு. குறிப்பாக மேலான படைப்பாகிய மனிதன் உயிர் வாழ்வதே இந்த “ரூஹு ” எனும் இறைக் கட்டளையைக் கொண்டே ஆகும். அல்லாஹ் ஜல்ல ஷானஹு எந்த ஒரு ரூஹையும் ஹிந்துவாகவோ, முஸ்லிமாகவோ, சீக்கியராகவோ, கிறிஸ்தவராகவோ, யூதராகவோ, நெருப்பை வணங்கும் மஜூஸியாகவோ படைக்கவில்லை. இறைவனின் கட்டளையாகிய ரூஹூ இவையாவையும் விட்டு பரிசுத்தமானது. இதற்கு மாற்றமான கோட்பாடு “குஃப்ர்” எனும் இறை மறுப்பைச் சேர்ந்ததாகும். உலகமானது நல்லது, கெட்டது எனும் இரண்டும் கலந்ததாக உள்ளபடியால், இதில் வாழும்ஷ மனிதனிலும் அவனுடைய பழக்க வழக்கங்களினால் இவ்விரண்டு தன்மைகளும் பொதிந்துள்ளன. ஒரு புறம் நம்முடைய ஆத்மா படைப்பாளனாகிய இறைவனிடம் மீண்டு அவனை அடைந்து கொள்ள நாடினாலும், மறுபுறம் நம்முடைய உலகாதய தேவைகளும் தூண்டுதல்களும் நம்மை இறைவனின் பக்கம் செல்லவிடாமல் தடுத்து உலக ஆசாபாசங்களின் பக்கம் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. இதுவே நமக்கும் இறைவனுக்கும் இடையே தடுப்புசுவராக ஆகிவிடுகின்றது. நஃப்ஸூம் ஷைத்தானின் ஊசாட்டங்களும் ஆத்மாவைப் படைத்தவனிடம் திரும்பவிடாமல் தடுத்துக் கொண்டுள்ளன.ஷ
ஸூஃபிகள் (புனிதர்கள்):
இறைவனை நெருங்கவிடாமல் தடுக்கும் மேலே குறிப்பிட்ட தடுப்புகளையெல்லாம் தகர்த்து, மனிதவர்க்கத்தை இறைவனுக்கு மிக நெருக்கமானதாக ஆக்கும் ஆற்றல் படைத்தவர்களே “ஸூஃபி” எனப்படுவர். ஸூஃபிகள் தங்களது கலப்பற்ற இறையன்பைக் கொண்டு தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்தவர்களாய் சதா அல்லாஹ்வின் நினைவிலேயே மூழ்கியிருப்பார்கள். அல்லாஹ்வின் அருட்கண் பார்வை தன் மீது பெறப்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த புனிதர்கள் மனித வர்க்கத்தாரின் ஆத்ம தாகத்தை தீர்ப்பதன் மூலம் திருப்தி கொள்பவராவார்கள். இத்தகு இறைநேசர்களின் சமூகத்தில் அண்மியிருப்பதால் மனிதர்கள் உண்மையான இறையன்பையும், பாசத்தையும்,ஆத்ம திருப்தியும், நிம்மதியும் அடையப் பெற்றவர்களாக இருப்பர். உலகத்தில் சகலவிதமான உல்லாசங்களும் சௌகரியங்களும் இருந்தும், அவைகளின் நிலையற்ற தன்மையால் உண்மையான நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதில்லை. இந்த நிலையற்ற பொருட்களை இழந்துவிடின் நிம்மதியிழந்து துக்கித்தவர்களாக ஆகிவிடுவார்கள். ஆனால் புனிதர்களான “ஸூஃபி” எனும் இறைநேசர்கள் சகலவித உல்லாசங்களையும் இன்பங்களையும் தியாகம் செய்துவிட்டு சதா நிலைத்திருக்கும் இறைவனின் அன்பிலும் பாசத்திலும் லயித்திருப்பார்கள்.
படைத்தவனாகிய அல்லாஹ்விடமே அடைக்கலமாகி உண்மையான நிம்மதியும் ஆத்மசாந்தியும் திருப்தியும் அடையப்பெற்றவர்களாக இருப்பார்கள். இதனால்தான் இவர்களுடன் அடைக்கலம் புகும். நிம்மதியிழந்த மனிதர்கள், அந்த இறைநேசர்கள் அடைந்தது போன்ற இறையன்பையும் மன நிம்மதியையும் பெறுகின்றனர், தங்களது தாகம் தீர்ந்து இறைவனை நெருங்கினவர்களாக ஆகிவிடுகின்றனர். இத்தகு “ஸூஃபி ” எனும் இறை நேசர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளின் மூலம் இன்றும் மனிதர்களை இறைவனின் பால் சேர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகம் முடிவு நாள் வரை இவ்விறை நேசர்கள் இருந்துகொண்டு தான் இருப்பார்கள் என்று உலகில் இவர்கள் அறவே இல்லாமல் ஆகிவிடுகின்றார்களோ அன்றே இந்த உலக முடிவு நாளும் நிகழும். இப்படிப்பட்ட இறைநேசர்களுக்கு எந்த வித அறிமுகமும் தேவையில்லை. இவர்கள் உலகில் புதிதாகக் கிளம்பிய ஒரு கூட்டத்தாருமல்ல. ஒ ! மனநிம்மதியையும் ஆத்மசாந்தியையும் தேடும்ó மனிதர்களே ! ஜாக்கிரதை! உலகில் போலிகளும் வேடதாரிகளும் இருக்கிறார்கள். இது நினைவில் இருக்கட்டும் ! இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு கொள்ளவேண்டும். இன்றேல் நீங்கள் யாவற்றையும் இழந்து புகலிடம் கிடைக்கப்பெறாத நஷ்டவாளிகளாக அலையவேண்டிய அவல நிலையை அடையப் பெற்றவர்களாகிவிடுவீர்கள். ஜாக்கிரதை!
ஸில்ஸிலா ஷாஹியா அஸ்ராரியாவின் வரலாறு:
இத்தகைய “ஸூஃபி ” எனப்படும் புனிதர்களான இறைநேசர்களில் ஒருவர்தான் நமதுவழிகாட்டியும், இந்தியாவில் வங்காளத்தில் பிறந்த ஹஜ்ரத் சைய்யத் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள். தன்னுடைய கடின உழைப்பாலும், பிரயாசையாலும், தியாக மனப்பான்மையாலும் அல்லாஹ்வின் பேரில் கொண்டிருந்த கலப்பற்ற அன்பாலும், உண்மையான நிம்மதியும் ஆத்மதிருப்தியும் அடையப்பெற்ற மகான் ஆவார். அன்னார் தன்னுடைய கடினமான உழைப்பாலும், மிக்க ஆர்வத்தாலும் தன்னுடைய “முரீதுகள் ” எனப்படும் சீடர்களுக்கு, அல்லாஹ்வின் பால் அன்பு செலுத்தும் உயரிய ஞாதனப்பாதையை ஒளிமயமானதாக ஆக்கி அவர்களை அப்பாதையில் நடத்தினார்கள். அவருடைய போதனைகளைக் கடைப்பிடித்தால் நியாயத் தீர்ப்பு நாள் வரை நம்முடைய கவனம் திசை திருப்பப்படாமல் பாதுகாப்பான வகையில், அல்லாஹ்வின் பால் அன்பு செலுத்தும் ஞானப் பாதையில் நடந்து வெற்றி பெறலாம். ஹஜ்ரத் சைய்யத் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்பாக, இவ்வுயர்ந்த ஞானப் பதையில் மக்களை வழிநடத்தும் மேலான பொறுப்பை தனது அன்புக்குப் பாத்திரமான தன்னுடைய மாணாக்கரும் சீடருமாகிய ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் அலவி (ரஹ்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் அலவி (ரஹ்) அவர்களிடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள், நிம்மதியற்றிருந்த தங்களது ஆத்ம தாகம் தீர ஆத்ம சாந்தி பெற்று திருப்தியுற்று, அல்லாஹ்வின் பால் அன்பு செலுத்தும் நேரான ஞானப்பாதையில் நடக்கும் நற்பேற்றினைப் பெற்றனர்.
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் அலவி (ரஹ்) அவர்கள் இந்தியாவில், உத்தரபிரதேசத்தில், ஆஜம்கட் மாவட்டத்தில் உள்ள கொஹ்ன்டா எனும் ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். தன்னுடைய இறுதி மூச்சு வரை தன்னை மனித வர்க்கத்தின் சேவைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இவ்வுலகை விட்டு பிரியும் முன்பாக இச்சேவையின் மேலான பொறுப்பை தன்னுடைய அத்யந்த சீடரான ஹஜ்ரத் மௌலானா முஹம்மத் ஸயீத் கான் சாஹிப் (ரஹ்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.அன்னாரும் தன் குருநாதரின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பினார்கள். எண்ணிலடங்காதவர்கள் இவருடைய நற்போதனைகளால் பயனடைந்தனர்.
ஹஜ்ரத் ஸயீத் கான் சாஹிப் (ரஹ்) அவர்கள் 1976 வது வருடம், ஜனவரி மாதம், 30ந் தேதியன்று இப்பூவுலகை விட்டுப் பிரிந்தார்கள். அதற்கு முன்பாகவே தான் பெற்றிருந்த போதனைகள் எனும் பொக்கிஷத்தைத் தன்னுடைய மாணாக்கரும் தன்னுடைய அன்புக்கும் பாசத்திற்கும் உரிய தன்னுடைய சீடர் ஹஜ்ரத் மௌலானா அஸ்ராருல் ஹக்கான் சாஹிப் (ரஹ்) அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்கள். இப்புனிதரும் இறைநேசருமான ஹஜ்ரத் மௌலானா அஸ்ராருல் ஹக் கான் சாஹிப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய குருநாதரது நற்போதனைகளை ஆசிய, ஐரோப்பிய கண்டங்கள் மட்டுமின்றி உலகின் எல்லாப் பாகங்களிலும் பரப்பினார்கள். இலட்சக்கணக்கானவர்களின் மனத்துயர்களை நீக்கி, அவர்களின் ஆத்மதாகத்தைப் போக்கி, நிம்மதியும் ஆத்மசாந்தியும் அமைதியும் பொருந்திய சலனமற்ற உயர்ந்த நல்வாழ்க்கையைப் பெறும் நற்பேற்றினை அளித்தார்கள். அன்னாரது அழைப்பை ஏற்று எண்ணிலடங்காதோர், எப்படி விட்டில்பூச்சி எரியும் விளக்கை நோக்கிப் பாயுமோ அவ்வாறு இவ்விறைநேசரை அணுகி இந்த கண்ணியம் மிக்க ஞானப்பாதையில் நடக்கும் நாட்டத்துடனும் ஆவலுடன் விரைந்து வரலாயினர். அவ்வாறு வந்த யாவரும் தன்னுடைய சிறிய அறிவுக்கும், கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு வியப்புறும் அளவுக்கு ஈருலக வாழ்க்கையிலும் முன்னேற்றமும் வெற்றியும் பெற்றனர்.
யாவற்றையும் படைத்த உண்மையான படைப்பாளனாகிய அல்லாஹ்வின் பால் நாம் செலுத்தவேண்டிய கலப்பற்ற அன்பும் பாசமும் கலந்த இறைக்காதல் தத்துவத்தை ஹஜ்ரத் மௌலானா அஸ்ராருல் ஹக் கான் சாஹிப் (ரஹ்) அவர்கள் அகில உலகத்துக்கும், இடைவிடாத தனது ஆர்வத்துடனும் முழு முயற்சியுடனும் போதித்து வந்தார்கள். ஆத்மீகத்தினால் லோகாதயம், பொருள், செல்வம் இவைகளையெல்லாம் வெற்றிகொள்ளும் ஆற்றலின்,திறமையின் இரகசியத்தை வெளியாக்கினார்கள். நமது சிந்தனையின் இருப்பிடமான மூளையின் சக்தியை விட நமது இதயம் (கல்பு) அதிக சக்தி வாய்ந்தது என்பதையும், கல்பின் மூலம் நாம் நமது சிந்தனா சக்தியைக் கொண்டு சாதிக்க முடியாதவைகளையும் சாதிக்க முடியும் என்பதையும், நமது கல்பு (இதயத்தின்) அதிசயிக்கத்தக்க சக்தியையும் ஆற்றலையும் நிரூபித்துக் காட்டினார்கள். மனிதவர்க்கத்தைப் படைத்ததின் தத்துவார்த்த இரகசியத்தை விளக்கினார்கள். அதாவது, படைப்பின் நோக்கமே “அல்லாஹ்வைப் பற்றிய பூடகமான, அதாவது மறைவான ஞானத்தை அடைந்து, அதிலிருந்து கிடைக்கக் கூடிய விவரிக்க இயலாத அனுபூதி நிலையை அடைவது” என்பதுதான் என விளக்கினார். அதே போல் அல்லாஹ்வின் பால் கொள்ளும் மாசற்ற அன்பே மனம், உடல் மற்றும் ஆத்மா சம்பந்தப்பட்ட சகல நோய்களையும் போக்கும் அருமருந்து என்பதையும் விளக்கினார்கள்.
மனிதனுடைய அந்தரங்கத்தில் “நஃப்ஸெ அம்மாரா” எனும் சக்தி நமது இச்சைகளையும் ஆசைகளையும் தூண்டி விட்டு வணக்க வழிபாடுகளை மறக்கச் செய்து, இறைவனின் நல்வழியில் செல்ல விடாமல் மனிதனை தடுத்து விடுகிறது- அதன் தீமைகளையும் அதனுடைய மோசங்களையும் ஏமாற்றுதல்களையும் விளக்கிக் கூறி மனதினுள் தான் என்ற அகந்தையும், கர்வமும், காம இச்சையும் இருக்கும் வரை உண்மையான இறை வழிபாடு செய்ய முடியாது என்பதை உணர்த்தினார்கள். அண்ணல் ஹஜ்ரத் மௌலானா அஸ்ராருல் ஹக் கான் சாஹப்(ரஹ்) அவர்கள் நஃப்ஸை பகுத்தறிவதிலும், அதன் தீய சக்தியை ஒடுக்கி நல்வழி படுத்தும் திறமையும் பெற்றிருந்தார்கள் ; மிக மிகத் தீயவர்களாக இருந்தவர்களையும் சிறந்த மனிதர்களாக மாற்றிடும் ஆற்றலும் அவர்களிடம் இருந்தது.
கல்வி கூடங்களும், பயிற்சி சாலைகளும் நிறுவனர்களின் பெயர் கொண்டு இயங்குவது வழக்கமானது தான் இதைப் போலவே இந்த ஆன்மீத் தொடரும் தனது சமீபத்திய வழிகாட்டியான ஹஜ்ரத் முர்ஷத் மௌலானா அஸ்ராருல் ஹக் கான் சாஹிப் (ரஹ்) அவர்களின் பெயராலும், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த ஹஜ்ரத் சைய்யத் அப்துல்பாரி ஷாஹ்(ரஹ்) அவர்களுடைய பெயராலும் “ஸில்ஸிலயே ஷாஹியா அஸ்ராரியா” என்று அறியப்படுகிறது.
இறைநேசர்கள் மற்றும் புனிதர்களின் தலைவரான சைய்யதனா முஹம்மத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் இதயத்தில் பிறந்து அன்னாருடைய ஈமானின் பேரொளி, அகமியத்தின் மற்றும் அவரது சமூகத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள், கலீஃபாக்கள் மூலமாகவும், பல இறைநேசர்கள் மூலமாகவும் நம்மை வந்தடைந்த இந்த ஆன்மீகத் தொடரின் விவரங்களை, தனியாக, புத்தக வடிவில் (ஷஜ்ராவில்) காணலாம்.
© Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.